Saturday, 16 February 2013

இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது!

சரி.....உடையவர் கோபுரத்தில் இருந்து சொன்னது தான் என்ன? அவர் வாயாலேயே நாம் கேட்க வேண்டாமா?
.
.
.
எங்கே, உங்கள் காதுகளையும், கண்களையும், உள்ளத்தையும்.....இனி உடையவரிடம் கொடுங்கள்!
இதோ...உங்கள் உள்ளத்திலே...இராமானுசர் கையொப்பமிட்டு...பேசத் துவங்குகிறார்!
"அன்பர்களே, ஆசை உடையோர் எல்லாரும் ஓடி வாருங்கள்!
உழன்றும் உழவே தலை என்று தலையாய இருக்கும் நீங்களா இன்னும் உழன்று கொண்டிருப்பது? இதோ, கேளுங்கள்....
* உங்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள, மந்திரப் பொருள் இதுவே!
* நம் அனைவருக்கும் பொதுச் சொத்தான மந்திரப் பொருள் இதுவே!


நீங்கள் இதைத் தனியாக எங்கு போய்ப் படிப்பீர்கள்? படிக்க, பக்கம் நின்று கேட்டாலே போதும்! பரிந்து உள் உணர்ந்தாலே போதும்!
அதனால் "தெரிந்து/அறிந்து" வைத்துக் கொள்வதை விட, "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!
கவனமாகக் கேட்டு, ஆராத ஆசையுடன், "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்! "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!

----------------------------------------------------------------------------------------------------


* ஓம் என்றால் அ-உ-ம்! = அவன்-உறவு-நாம்!

* அ = அனைத்துக்கும் முதல் = அகர முதல = இறைவன்!
* ம் = நாம்!
* உ = உறவு!

அவன் எங்கோ இருக்கிறான், தவம் செய்தால் மட்டுமே அடைய முடியும் என்று நினைத்து விடாதீர்கள்! பெற்றவளைக் காணத் தவம் செய்ய வேணும் என்றில்லை!
அவனுக்கும்-நமக்குமான உறவு "என்றும்" இருக்கிறது! அதை அவனே நினைத்தாலும் ஒழிக்க முடியாது!

அவனுக்காகவே நாம்! நமக்காகவே அவன்!
# அதனால் "பய பக்தியில்" பயத்தை விட்டு விடுங்கள்! பத்தியைக் கைக் கொள்ளுங்கள்! ப்ரபத்தியைக் கைக்கொள்ளுங்கள்!
# "நம் வீட்டிலே அவனும் ஒருவன்" என்று அனுதினமும் அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்! = அது தான் ஓம்!
----------------------------------------------------------------------------------------------------


* நமோ என்றால் ந-ம = எனதில்லை! எனது இல்லவே இல்லை!
# எல்லாம் எனக்குக் "கொடுக்கப்பட்டது"! எல்லாமே வாடகைப் பொருள்!

அதற்காக எல்லாத்தையும் விட்டுறச் சொல்லலை! அவற்றுக்கு நிரந்தர மதிப்பைக் கொடுக்காமல், தற்காலிக மதிப்பைக் கொடுங்கள், போதும்!
உலகம் மாயை அல்ல!
உலகம் உண்மை! நீங்களும் உண்மை!


# ஆசையை விட்டு விட எல்லோராலும் முடியாது! ஆசையை ஒழிக்க முயலாதீர்கள்! ஆசையை வையுங்கள்! :)
ஆனால் எங்கே? = அவன் திருமேனி மீது "அதிக" ஆசை வைத்து விடுங்கள்!

அங்கு அதிகம் வைத்து விட்டால், மற்ற "ஆசை"களால் உங்களை "அசை"க்க முடியாது!
ந-மோ = நான் எனக்குச் சொந்தம் இல்லை! நான் அவனுக்கு மட்டு"மே" சொந்தம்!
----------------------------------------------------------------------------------------------------


* நாராயணாய என்றால் நமக்கு அவனே தஞ்சம்! அவனுக்கு நாமும் தஞ்சம் = அதுவே நாரா + அயண!


வேறு உபாயங்கள் நடுவில் உள்ளனவா? = இல்லை! இல்லவே இல்லை! அவ"னே" தஞ்சம்!
அதான் வெறுமனே "நாராயண" என்று சொல்லாது, "ஆய" என்பதை உடன் சேர்த்து
நாராயண-"ஆய"! அவ"னே" தஞ்சம்!

நாரணம் = நாரம் என்றால் நீர்! அணம் என்றால் அருகில்! அவன் "நீர்-மைக்கு அருகில் நாம் எல்லாரும்!
# அவன் நீரைப் போல! = நீர் இன்றி அமையாது உலகு!
# அவன் நீரைப் போல! = எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைக் கொள்வான்!
# அவன் நீரைப் போல! = கீழ் நோக்கியே இறங்கி வருவான்!
நீரே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவையும் அதுவே விளைவிக்கும்! அது போல் காரணமும் அவனே! காரியமும் அவனே!

அவன் தொலைவில் இருக்கிறவன் என்று பூஜைகளோடு மட்டும் ஒதுக்கி வைத்து விடாதீர்கள்!
அவன் நம்மில் ஒருவன் என்று அனுதினமும்...அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்!
அந்த உறவு தான் பலம்! இன்பம்! நிம்மதி! எல்லாம்!



பொதுவாகத் தாலிச் சரட்டில், 8 இழைகள் - 2 சரடாய் இருக்கும்! 8x2=16
ஆனால் இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது!

8 எழுத்து x 3 பதம்
 = 8 இழைகள் x 3 சரடுகளாய், 
8x3=24...இன்னும் இறுக்குகின்றது! உங்களை அவனோடு இறுக்குகின்றது!

1. ஓம் (1)
2. ந-மோ (2)
3. நா-ரா-ய-ணா-ய (5)
* இந்தப் பெரிய திருமந்திரமே = "உங்கள்-அவன்" உறவுக்கான தாலிச் சரடு! திருமாங்கல்யம்!
ஓம் + நமோ + நாராயணாய
* நம்மை அவனுக்கு மட்டு"மே" கட்டி வைத்துள்ள திருமாங்கல்யம்!
* அவனையும் பிடித்து, நம்மிடத்தில் உறவு ஏற்படுத்தி விட்ட திருமாங்கல்யம்!

பிறவிகள் தோறும் உலகத் தாலி மாறி விடும்! ஆனால் இந்தத் தாலி மட்டும் என்றும் மாறவே மாறாது! என்றும் கூடவே வரும்! எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து!

எங்கே.......
திருக்கோட்டியூர் நம்பிகளின் சீடன்,
அடியேன் இராமானுசனுடன் எல்லாரும் சேர்ந்து...

இந்தப் பெரிய திருமந்திரத்தை,
நாடும் நகரமும் நன்கறிய...
சொல்லும் போது...வெறுமனே வாய் அளவில் சொல்லாமல்...


* தாலிச் சரட்டை மனசாரத் தொட்டுக் கொள்ளுங்கள்!
* உறவு, உறவு, உறவு என்று நினைத்துக் கொண்டு,
எல்லாரும் மூன்று முறை சொல்லுங்கள்!


ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!


(நிறைவு)

குலம் தரும்! செல்வம் தந்திடும்!
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும்! நீள்விசும்பு அருளும்!
அருளொடு பெருநிலம் அளிக்கும்!

வலம் தரும்! மற்றும் தந்திடும்!
பெற்ற தாயினும் ஆயின செய்யும்!
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்,
(ஓம் நமோ Dash, இது தான் அந்த Dash...)
நாராயணா என்னும் நாமம்!


திருமாங்கல்ய தாரண காரண - பெரிய திருமந்திர - விவரண அவதாரிகை சம்பூர்ணம்! 




இத்துடன்....மாதவிப் பந்தலில்,
* ஓம் (அ-உ-ம்) என்பதற்கான விளங்கங்களும் - 123
* நமோ என்பதற்கான விளக்கங்களும் - 12
* நாராயணாய என்பதற்கான விளக்கங்களும் - 12345

நிறைந்தே நிறைவானது! மாதவிப் பந்தலும் நிறைவானது! "நிறைந்தேலோ" ரெம்பாவாய்!


புகுந்த வீட்டில் புகுந்தாலும், சில அதீத அன்புள்ள பெண்கள், பிறந்த கிராமத்தையே மனத்தளவில் சுவாசித்துக் கொண்டு இருப்பார்கள்!
அது போலத் தான், பந்தலின் சுவாசத்தில், துளசீ மணமே அதிகம் கமழ்ந்து கொண்டு இருந்தது!

ஆனாலும், எங்கள் குல தெய்வம், தமிழ்க் கடவுள், அடியேன் இள வயதில் புகுந்த பிரான்,
என் முருகப் பெருமானிடத்திலே.....
இது வரை வந்த பந்தல் பதிவுகளையும், அடியார் கைங்கர்யத்தையும், இனி-தே ஒப்புக் கொடுத்து விடுகிறேன்!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி, நாடி நான் கண்டு கொண்டேன் நாரணா என்னும் நாமம்!

காதல் என் பெருமானே,
"உன் தனக்கு-நான்"
என்று "எழுதப்பட்ட" அந்நாள்!


உனக்கே நான் ஆட்செய்வேன்! உனக்கே நான் ஆட்செய்வேன்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
காதலால்...
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!



- உன் இதய வாசல்படி, மாதவிப் பந்தல்!

No comments:

Post a Comment