Saturday, 16 February 2013

, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!







நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)


வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!
பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு! 


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!

No comments:

Post a Comment