இப்போது நாம் அடிக்கடிக் கேட்கும் ஒரு வரி உண்டு, இந்திய சிந்தனை என்று ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்று ஒன்று இல்லை. அதெல்லாம் வெள்ளைக்காரன் வந்து உருவாக்கியது. பல தளங்களில் இந்த கூச்சல் எழுந்துகொன்டே இருக்கிறது. இந்தக் குரல் பெரும்பாலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் தயாரிக்கப்பட்டு நமக்கு அனுப்பப்படுகிறது … இந்தக்குரலை எவர் எதிரொலி செய்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவில் இன்று வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். அவர்களை மேலைநாட்டு பல்கலைகள் அழைத்து கௌரவிக்கும். பட்டங்களும் நிதிக்கொடைகளும் அளிக்கும்…
உண்மையில் அப்படித்தானா? உதாரணமாக இந்து ஞான மரபு என்ற ஒன்று எப்போதிருந்து இருக்கிறது?.. நமக்கு எப்போது முதல் நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போது முதல் இதற்கு ஒரு பாடத்திட்டம் [கரிக்குலம்] தெள்ளத்தெளிவாகவே கிடைக்கிறது. இருந்ந்தும் இப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நம்மிடம் வாதிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.
இந்த பாடத்கிட்டம் எல்லா இந்து ஞான வழிகளுக்கும் பொதுவானது. நீங்கள் திருவாவடுதுறை மடம் சென்று சைவம் கற்றாலும் சரி, அகோபிலம் சென்று வைணவம் கற்றாலும் சரி இதை கற்றாக வேண்டும். செவ்வியல் இலக்கியங்களை விடுங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் கூட அப்படித்தான். ஒரு கதாநாயகன் சகல கலா வல்லவன் என்றால் உடனே அவன் இந்த பாடத்திட்டத்தை கற்றவன் என்பார்கள். நீங்களே கேட்டிருக்கலாம். சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் – ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு!
அந்த பாடத்திட்டம் இதுதான்.
1. வேதங்கள்
2. மூன்று தத்துவங்கள்: அதாவது பிரஸ்தான திரயம். கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்.
3. ஆறு தரிசனங்கள்: சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் பூர்வமீமாம்சம் உத்தர மீமாம்சம்
4 ஆறு மதங்கள்: சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம்
இவற்றை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு நூல்வரிசையாக எண்ணிவிடக் கூடாது.. ஒன்றுக்கு இன்னொன்றுடன் உள்ள உறவும் முரண்பாடும் முக்கியமானவை…

No comments:
Post a Comment